சீமான், விஜயலட்சுமி இருவருமே மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையிலான வழக்கில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வு முன் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், “சீமான் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, விஜயலட்சுமிக்கு எதிரான அவதூறுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், ஊடகங்களிடம் விஜயலட்சுமி குறித்து அவதூறாகப் பேசி வருகிறார்,” என்று வாதிட்டார்.
இதற்கு சீமான் தரப்பு வழக்கறிஞர், “2011-ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமி அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு 2023-ல் மீண்டும் அதே புகார்களைத் தெரிவித்துள்ளார்,” என்றார்.
நீதிபதிகள், “இந்த இடைப்பட்ட காலத்தில் ஏன் வழக்குத் தொடரவில்லை?” என்று விஜயலட்சுமி தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜயலட்சுமி மிரட்டப்பட்டதாகவும், அதனால் அவரது திரை வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பொதுவெளியில் அவரது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகவும் விஜயலட்சுமி தரப்பு பதிலளித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரு தரப்பினரும் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் திரும்ப பெறுவதுடன், பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து இனி இரு தரப்பினரும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசக்கூடாது. மீறி பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த உத்தரவை சீமான் தரப்பு ஏற்றுக்கொண்டது.
Edited by Mahendran