தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
தென்மேற்கு பருவமழை இன்று அந்தமானில் தொடங்கியதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 20ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இது கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்குவது இயல்பு. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அந்தமானில் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையடுத்து, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டம் காணப்படும். பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பம் நிலவும் என வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran