வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2024 (07:36 IST)

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை மற்றும் புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மழை பாதிப்பு குறித்த சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சற்று முன் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே புதுவையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, கள்ளக்குறிச்சியில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva