1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2025 (12:12 IST)

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

Anbumani Ramadoss

இனி நானே பாமகவின் தலைவர் என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில் இதற்கு அன்புமணியின் ரியாக்‌ஷன் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில காலமாகவே முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் புதுச்சேரியில் நடந்த பாமக கூட்டத்தில் இருவரும் வெளிப்படையாக அதை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் பாமகவில் பரபரப்பு எழுந்திருந்த நிலையில், பாமகவில் முரண்பாடுகள் எழுவது சகஜம்தான் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ் “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு. இனி அன்புமணி பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார்” எனக் கூறியுள்ளார்.

 

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றிய அன்புமணி ராமதாஸின் ரியாக்‌ஷன் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரிடம் இதுகுறித்து முன்னரே கூறப்பட்டதா அல்லது அதிரடி முடிவாக எடுக்கப்பட்டதா என தெரியாமல் பாமகவினரே குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாமக யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இருவேறு நிலைபாடுகள் இருந்ததாக தெரிகிறது. ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையில், அன்புமணி பிடிவாதத்தால் பாஜக கூட்டணி அமைந்ததாகவும், அதில் பாமக பெரும் பின்னடைவை சந்தித்ததால் பாமகவின் தலைவராக அன்புமணி செயல்பாடுகளில் ராமதாஸுக்கு அதிருப்தி நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே 2026 கூட்டணியை நிர்ணயிக்கும் முடிவை தானே எடுத்துக் கொள்ளும் விதமாக இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது ராமதாஸின் இந்த முடிவு குறித்து அன்புமணி என்ன செய்யப்போகிறார் என்பது கேள்வியாக உள்ளது.

 

Edit by Prasanth.K