விஜய்யின் நாமக்கல் கூட்டம்.. தவெக கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்க போலீஸ் மறுப்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சனிக்கிழமை நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவர் கட்சி நிர்வாகிகள் கோரியிருந்த இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள், மதுரை வீரன் கோவில் பொய்யேரிக்கரை, கே.எஸ்.திரையரங்கம் அருகில், பூங்கா சாலை உள்ளிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து காவல்துறை அனுமதி கோரியிருந்தனர்.
அப்போது, காவல்துறையினர் விஜய்யின் பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொய்யேரிக்கரை பகுதியில் கூட்டம் நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அந்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக, நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பொன் நகர் அல்லது நான்கு திரையரங்கம் அருகில் கூட்டத்தை நடத்தலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறையின் இந்த முடிவை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ஆனந்திடம் தெரிவித்துள்ளனர். அவர் இன்று நாமக்கல் வந்து, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இறுதி முடிவை எடுப்பார் என்றும், அதன் பிறகு மீண்டும் காவல்துறையிடம் அனுமதி கோருவோம் என்றும் தெரிவித்தனர்.
Edited by Siva