நேற்று வடமாநில தொழிலாளி பலியானது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சக தொழிலாளர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறாக உத்தரபிரதேசத்தில் இருந்து வந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த அமரேஷ் பிரசாத் என்ற இளைஞர் குடியிருப்பில் உள்ள மாடிக்கு சென்றபோது கால் தவறி விழுந்து பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு நேற்று 2 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீஸாரையும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் செங்குன்றம் துணை கமிஷனர் உள்பட பல போலீஸார் காயமடைந்துள்ளனர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
மேலும் போலீஸார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு திடீரென வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதும், காவல்துறையினரை தாக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K