ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டே இளைஞர் ஒருவர் ரயிலை கடத்தப் போவதாக போன் காலில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது, காவல் உதவி எண்ணான 100க்கு ஒரு மர்ம போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்தப்போவதாக மிரட்டிவிட்டு போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் அந்த நபரின் எண்ணை ட்ராக் செய்ததில் அந்த நபர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் பயணித்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ரயில் காட்பாடிக்கு முன்னதாக சென்றுக் கொண்டிருந்த நிலையில், உடனடியாக இந்த தகவல் ரயில்வே போலீஸாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக காட்பாடி ரயில்வே நிலையத்தில் குவிந்த ரயில்வே போலீஸார், ரயில் காட்பாடியை அடைந்ததும் பொது வகுப்பு பெட்டிக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அப்பாவி போல அமர்ந்திருந்த மிரட்டல் பேர் வழியை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் தர்மபுரியை சேர்ந்த சபரீசன் என்பதும் வேலை இல்லாத விரக்தியில் இவ்வாறாக மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சபரீசனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
Edit by Prasanth.K