பூண்டி ஏரியை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியிலும் உபரி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை..!
பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி ஏற்கனவே அனைவருக்கும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது பூண்டி ஏரியை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியிலும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, 3,645 மில்லியன் கன அடியான முழு கொள்ளளவுடன் காணப்படுகிறது. தற்போது 3,100 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து 6500 கன அடியாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர், திருநீர்மலை, அடையாறு ஆற்றின் கரையில் உள்ள இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Edited by Siva