1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 மே 2025 (07:27 IST)

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்த மத்திய அரசின் வாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க வழிவகை செய்யப்படுகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி வருகின்றன. ஆனால் இந்த ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாத நிலையில் இதுகுறித்து தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தது.

 

இந்த மனு மீதான விசாரணையில் உரிய விளக்கம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இதில் ஆஜராகி மத்திய அரசுக்காக விளக்கம் அளித்த வழக்கறிஞர் ”மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுக்கான கல்வி கட்டண தொகை ஒதுக்கப்படாமல் உள்ளது” என்று தெரிவித்தார்.

 

இந்த விளக்கம் குறித்து அதிருப்தி தெரிவித்து தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மையில் செயல்படுகிறது” என விமர்சித்தார்.

 

இந்நிலையில் 25 சதவீத மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் அதன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு கூறி தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

 

Edit by Prasanth.K