தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?
தமிழகத்தில் ஒரே நேரத்தில் குமரிக்கடல் மற்றும் அந்தமானுக்கு கிழக்கே என இருவேறு காற்றழுத்த அமைப்புகள் உருவாகியுள்ளன.
முதலில் உருவான குமரிக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. எனினும், இது புயலாக மாறாது என்றும், இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுவும் புயலாக மாறாமல் கடலிலேயே கரையும் வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு காற்றழுத்த தாழ்வு நகர்வால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நவம்பர் 29 அன்று சென்னை, காஞ்சிபுரம் உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுவடைவதை பொறுத்து, அது புயல் சின்னமாக வலுப்பெறுமா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran