திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:53 IST)

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியுமா? அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!!

highcourt
சென்னை கோயம்பேட்டில் இருந்து மேலும் சில வாரங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியுமா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு ஜனவரி 24ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல், அரசு செயல்பட முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
 
இதையடுத்து தடையை மீறி சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளை, போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஆம்னி பேருந்துகளை சில நாட்கள் சென்னைக்குள் இயக்க வேண்டும் என்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 
கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையர் நாளை விளக்கம் அளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.