திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (20:59 IST)

தமிழ்நாட்டிற்கு 3,440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

stalin
ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்திவிட்டு, சென்னை திரும்பியுள்ள நிலையில், சொன்னதை நிறைவேற்றித் தரும் தமிழ்நாடு! என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ''ஸ்பெயினில் மொத்தம் 9 நிறுவனத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதன் பலனாக 3,440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள்
தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன.
 
தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்பு சூழ்ந்திருந்த இருளும் பனியும் விலகி, வெளிச்சக் கதிர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அயராத முயற்சியினால் பாயத் தொடங்கியிருக்கின்றன. ஸ்பெய்ன் முதலீட்டாளர் மாநாட்டில் இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக்: ‘இந்தியாவிலிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து உங்களிடம் பேசியிருக்கலாம்.
 
இந்தியாவின் முக்கியமான மாநிலங்களின் ஒன்றான தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்கள் உங்களுக்கு என்ன உத்தரவாதம் தருகிறார்களோ அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள். அந்த மாநிலத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் இதனை உணர்கின்றன. அதனால், நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.
 
ஏறத்தாழ 4 கோடியே 75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டின் கலைப்படைப்புகள் உலகின் பல நாடுகளையும் ஈர்க்கக்கூடியனவாக இருக்கின்றன. அவற்றைப் பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகிறார்கள்.
 
தலைநகர் மேட்ரிட் மற்றும் புகழ் மிக்க நகரங்களான பார்சிலோனா, செகோவியா, டொலிடோ எனப் பலவும் தனது பழம்பெருமை மிக்க கலைவடிவங்களால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. போகும் வழியெல்லாம் ஆலிவ் மரங்கள் தலையசைத்து வரவேற்பது போல இருந்தன.
 
12-ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில்
பிராடோ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. நாங்கள் அங்கே சென்றிருந்தபோது இளைய
தலைமுறையினர் பலரும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.
நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு.

உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர்உணர்ந்துகொண்டால்தான், வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பார்கள். பயணம் என்பது உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல். பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. 

பயணத்தில் இருந்தாலும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணம் நெருங்கி வருவதால் காணொலி வாயிலாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டேன். கழகத்தின் தலைவர் என்ற முறையில் கழக நிர்வாகிகளிடம் தொடர்ந்து உரையாடினேன். நம்முடைய உடனடி களப்பணி என்பது நாடாளுமன்றத் தேர்தல் களம்தான். ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும்! தமிழ்நாடு வளம் காணும்! ''என்று தெரிவித்துள்ளார்.