18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மாளபே கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித் மற்றும் சந்த்ரி ஆகிய இரண்டு ஒப்பந்த ஊழியர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த இருவரும் கடந்த 18 மாதங்களாக, இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் தனியார் வாடிக்கையாளர்களின் கப்பல் கட்டுமானம் தொடர்பான ரகசிய தகவல்களை பணத்திற்காக வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானில் உள்ள தங்கள் தொடர்பாளர்களுக்கு அனுப்பியதாக காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பரிமாறிய தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு பெரிய உளவு வலையமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தேசியப் பாதுகாப்பு அமைப்புகளும் விரைவில் விசாரணையில் இணையவுள்ளன.
Edited by Siva