கேள்விக்குறியாகும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு: ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையின் போது, உணவு டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. Zomato நிறுவனத்தின் ஊழியரான சையத் ஃஃபர்ஹான், உணவு டெலிவரி செய்ய சென்றபோது, மழைநீர் நிரம்பிய வடிகாலில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானார்.
இந்த சம்பவம், கடுமையான வானிலை நிலவும்போதும் டெலிவரி ஊழியர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த விபத்தில், ஃஃபர்ஹானின் இருசக்கர வாகனம் சேதமடைந்ததுடன், அவரது மொபைல் போனும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து, தெலங்கானா கிக் தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "டெலிவரி தொழிலாளர்களின் பாதுகாப்பை விட, லாபத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்கள் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.
மழைக்காலம், புயல், வெள்ளம் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும் டெலிவரி ஊழியர்கள் வேலைக்கு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால், அவர்களுக்கு நேரும் விபத்துக்களுக்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. டெலிவரி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Edited by Mahendran