டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற விமானம் திடீரென புயலில் சிக்கிக் கொண்ட நிலையில், அவசரமாக விமானத்தை தரையிறக்க, பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த விமானி அனுமதி கேட்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம் ஒன்று திடீரென புயலில் சிக்கியதால், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதனை அடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து, விமானத்தை பாதுகாக்க கடவுளிடம் வேண்டினர். விமானி மிகவும் திறமையாக விமானத்தை தரையிறக்க, பயணிகள் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் நேரவில்லை.
இந்த நிலையில், விமானி ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும், அந்த வழியை பயன்படுத்தினால் குறுகிய நேரத்தில் விமான நிலையத்தை அடையலாம் என எண்ணி முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்ததால், விமானம் சில கிலோமீட்டர்கள் சுற்றி வந்து தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கிடையில், அதிக காற்றழுத்தம் காரணமாக விமானம் அதிர்வை சந்திக்க வேண்டியிருந்தது.
விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருப்பது தெரிந்தும், பாகிஸ்தான் தனது வான் வழியை பயன்படுத்த அனுமதி அளிக்காதது குறித்து நெட்டிசன்கள் கடும் விமர்சனம் பதிவு செய்து வருகின்றனர். "பாகிஸ்தான் தண்ணீர் கேட்டால் அவர்களின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கவே கூடாது எனக் கூறி வருகின்றனர்.
Edited by Siva