பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுப்பண்ணா ஐயப்பன் என்ற 70 வயது வேளாண் விஞ்ஞானிக்கு 2022 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் மைசூர் பகுதியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மே 7ஆம் தேதி அவர் காணாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாண்டியா பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும், இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விசாரணை தொடங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva