மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செயின்ட் மேரிஸ் பெயர் வைப்பதா? குவியும் கண்டனங்கள்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 'சிவாஜி நகர்' என்பதற்கு பதிலாக 'செயின்ட் மேரிஸ்' எனப் பெயர் சூட்ட முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி நகரில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சித்தராமையா, வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரிஸ் பெயரை வைக்குமாறு மத்திய அரசுக்கு தான் பரிந்துரைத்திருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக பாஜகவின் கண்டனத்தைப் பெற்றது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது கண்டன அறிக்கையில், "பெங்களூரு சிவாஜி நகர் மெட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரிஸ் என பெயர் சூட்ட கர்நாடக அரசு எடுத்த முடிவை நான் கண்டிக்கிறேன். இது சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றார்.
கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சால்வாடி நாராயண சுவாமி, "சிவாஜி நகர் பெயரை அகற்றுவார்களா? அவர்கள் வரம்புகளை மீறக்கூடாது. ஓட்டு வங்கி அரசியல் காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக மாறிவிட்டது. அவர்களின் கட்சி சீரழிந்தது ஓட்டு வங்கி அரசியலால் தான். இன்னும் அவர்கள் அதை தொடர்ந்து செய்கிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று எச்சரித்தார்.
Edited by Siva