சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், சிகரெட் பற்றவைக்க லைட்டரை வழங்க மறுத்த காரணத்துக்காக, இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று கெடம் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் கோண்டேன் ஆகியோர் இருந்தபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் அவர்களிடம் சிகரெட் பற்றவைக்க லைட்டர் கேட்டுள்ளனர். இருவரும் லைட்டரை வழங்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உடனடியாக கற்கள் மற்றும் கத்திகளை பயன்படுத்தி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தக் கொடூர தாக்குதலில் கெடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பரான கோண்டேன் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய பொருளை தர மறுத்த காரணத்துக்காக நடந்த இந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran