டிஜிட்டல் அரெஸ்ட்: ஓய்வூதிய பணம் ரூ.23 கோடியை ஒரே நாளில் இழந்த வங்கி அதிகாரி.!
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை 'டிஜிட்டல் கைது' செய்து, அவரது வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை சைபர் மோசடி கும்பல் பறித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 78 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான நரேஷ் மல்ஹோத்ரா, கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், ஒரு போலி அழைப்பு மூலம் இந்த மோசடிக்கு ஆளாகியுள்ளார். தன்னை ஒரு விசாரணை அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்ட மோசடிக்காரன், நரேஷின் ஆதார் எண் பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்றும் மிரட்டியுள்ளார்.
இதற்கு பிறகு, மும்பை காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை என பல்வேறு போலியான அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுவதும், நரேஷ் வீடியோ அழைப்புகள் மூலம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், வங்கிக்கு சென்று வர மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 4 வரை, நரேஷின் மூன்று வங்கி கணக்குகளில் இருந்து 20 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 23 கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நரேஷ் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வீடியோ காலில் வந்து தங்கள் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்றும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர். குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக பணம் கேட்டு மிரட்டி பெற்றுள்ளனர்.
இந்த மோசடி கும்பல் குறித்து டெல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை ரூ.2.67 கோடி மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Edited by Mahendran