1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Prasanth K
Last Modified: புதன், 9 ஜூலை 2025 (13:19 IST)

OTT Review: ராஜீவ்காந்தி கொலை! ஒரு பக்கமாக நகரும் கதை? தமிழ் மேல் என்ன வன்மம்?! - தி ஹண்ட் விமர்சனம்!

The Hunt rajiv gandhi assassination case review in tamil

இந்தியாவை உலுக்கிய கொலை வழக்குகளில் முக்கியமான ஒன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொள்ள வந்தவர் குண்டுவெடிப்பில் பலியானதும், அது தொடர்பான விசாரணையின்போது இது விடுதலை புலிகள் அமைப்பால் செய்யப்பட்டது தெரிய வந்ததும் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 

1991ம் ஆண்டு மே 21ல் நடந்த இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட விடுதலை புலிகள், அதன் துணை அமைப்பான கருஞ்சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்பட்டவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் முக்கிய சூத்ரதாரியான விடுதலை புலிகளை சேர்ந்த பாக்கியா எனப்படும் சிவராசன், நித்யா, ராஜரத்னம் ஆகியோர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு 90 நாட்கள் கழித்து பெங்களூரில் உள்ள வீட்டில் சைனட் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தனர்.

 

இந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் குழுவினரின் கண்ணோட்டத்திலிருந்து பயணிக்கிறது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ள தி ஹண்ட் : ராஜீவ்காந்தி அசாசினேஷன் கேஸ் (The Hunt: The Rajiv Gandhi Assassination Case). ராஜீவ் காந்தி கொலை சம்பவத்திற்கு பிறகு அதை புலிகள் பக்கமிருந்தும், விசாரணை குழுவினர் பக்கமிருந்தும் ஏராளமான புத்தகங்களாக வெளிவந்துள்ளன. 

The Hunt rajiv gandhi assassination case review in tamil

இந்த வெப் தொடரை நாகேஷ் குகுனூர், ரோஹித் பனாவில்கர், ஸ்ரீராம் ராஜன் உள்ளிட்டோர் இணைந்து எழுத, நாகேஷ் குகுனூர் இடக்கியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திரட்டப்பட்ட தகவல்கள், விசாரணை சென்ற கோணம், விசாரணையில் பெரும் மாற்றத்தை அளித்த கேமரா ஆதாரம் என பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில் ஒரு ஆவணத் திரைப்படம் போல, அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பயணிக்கிறது இந்த வெப் தொடர். ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து பெரிதும் அறிந்திராத புதிய தலைமுறையினருக்கு இந்த தகவல்கள் சுவாரஸ்யமானதாக இருக்கக் கூடும். ரகோத்தமனாக பகவதி பெருமாள், டி ஆர் கார்த்திகேயனாக அமித் ஷியால், சிவராசனாக சஃபீக் முஸ்தபா நடிப்பில் சிறப்பாக ஸ்கோர் செய்கின்றனர். சிவராசனாக நடித்த சஃபீக் முஸ்தபா கவனம் ஈர்க்கிறார்.

The Hunt rajiv gandhi assassination case review in tamil

ஆனால் அதேசமயம் இந்த வெப் தொடர் ஈழத்தமிழர்கள் தரப்பை முழுமையாக காட்டவில்லை என்ற கருத்துகளும் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. முக்கியமாக தமிழ் பார்வையாளர்களிடம். மேலும் வெப் தொடரில் ஒரு இடத்தில் பேரறிவாளனை குண்டு தயாரிப்பவர் என்று குறிப்பிட்டிருந்ததற்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பேரறிவாளன் கைது, விசாரணை உள்ளிட்ட காட்சிகள் அதில் இடம்பெறவில்லை. 

 

என்னதான் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்றாலும், ராஜீவ் காந்தி எவ்வாறு கொல்லப்பட்டார்? அதை எப்படி விசாரித்து குற்றவாளிகளை பிடித்தார்கள் என்ற தகவல்களை தாண்டி, உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரமாக்கல், காட்சிப்படுத்தல் சரியாக அமைந்திருக்கவில்லை. முக்கியமாக கதாப்பாத்திரங்கள் பேசும் தமிழ். டப்பிங் தொடர் என்பதால் தமிழர்களுமே தமிழ் தெரியாதது போல பேசும் இடங்கள் அசௌகர்யத்தை அளிக்கின்றன. யார் ஈழத்தமிழ் பேசுகிறார், யார் உள்ளூர் தமிழ் பேசுகிறார் என்று தமிழர்களே குழம்பும் அளவிற்கு தமிழ் டப்பிங் உள்ளது. 

 

Edit by Prasanth.K