1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மார்ச் 2025 (12:55 IST)

ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லாம் காணோம்? - Avengers Doomsday அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

avengers doomsday

மார்வெல் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் குறித்த அறிவிப்பில் முக்கிய சூப்பர் ஹீரோக்கள் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டுடியோஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு படத்துடன் மற்றொரு படத்தை தொடர்பு படுத்தி வரும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்தது தண்டர்போல்ட்ஸ் வெளியாக உள்ளது.

 

அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தைதான். அயர்ன் மேனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ராபர்ட் டோனி ஜூனியர் இந்த படத்தில் டாக்டர் டூம் என்ற கதாப்பாத்திரத்தில் வருகிறார்.

 

தற்போது இந்த படத்தில் இடம்பெறும் சூப்பர்ஹீரோக்கள் பற்றிய அப்டேட்டை மார்வெல் வெளியிட்டுள்ளது. அதில் டாக்டர் டூம், தோர், லோக்கி, ஆண்ட் மேன், ப்ளாக் பாந்தர், பெண்டாஸ்டிக் போர் மற்றும் தண்டர் போல்ட்ஸ் கதாப்பாத்திரங்களும் இடம்பெறுகின்றனர். பல சூப்பர் ஹீரோக்கள் இணையும் இந்த படத்தில் மார்வெலின் முக்கிய சூப்பர் ஹீரோக்கள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மார்வெலின் புகழ்பெற்ற ஹீரோக்களான ஸ்பைடர்மேன், ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், டெட்பூல், வுல்வரின், டேர்டெவில் உள்ளிட்டவர்கள் இதில் இடம்பெறவில்லை. சமீபமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சூப்பர் ஹீரோக்களான மிஸ் மார்வெல், மூன் நைட், ஷீ ஹல்க், கேப்டன் மார்வெல், கேட் பிஷப் உள்ளிட்ட பலரும் இதில் இல்லை.

 

ஆனால் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கதைக்குள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K