ஆடி முதல் வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு: பக்தர்கள் குவிந்தனர்!
உலக உயிர்களை காக்கும் அன்னை பராசக்தி அவதரித்த ஆடி மாதத்தில், அனைத்து நாட்களும் சிறப்பு என்றாலும், ஆடி வெள்ளி தனிச்சிறப்பு மிக்கது. இந்த நாளில் அம்மனை வழிபட்டால் சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம் தொடங்கிய உடனேயே முதல் ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பைக் கூட்டுகிறது.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், தென் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து அம்மனைத் தரிசித்து நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.
இன்று , ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்களும், பெண்களும் குழுக்களாக கோவிலில் அம்மன் பாடல்கள் பாடி, வேப்பிலையுடன் ஆடி வந்தனர். சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
ஆடி மாதம் என்பதால், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
Edited by Mahendran