1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 மே 2025 (09:10 IST)

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஏனென்றால் அவரின் உடல்தகுதிக்குக் குறைந்தது இன்னும் 4 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம். கோலி ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுபற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்தன. அப்போது அவரிடம் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கோலியின் நெருங்கிய நண்பருமான ரவி சாஸ்திரி இதுபற்றி பேசியுள்ளார். அதில் “நான் கோலி முடிவை அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இது பற்றி அவரிடம் பேசினேன். அவர் “கிரிக்கெட்டுக்காக நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன்” என்று தெளிவாக சொன்னார். அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டேன். அதற்கும் அவரிடம் தெளிவான விளக்கங்கள் இருந்தன. அதனால் நான் இதுதான் சரியான நேரம் என உணர்ந்துகொண்டேன்” எனக் கூறியுள்ளார்.