திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நடிகை பிரிகிதா சாகா.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரிகிதா சாகா . சின்னத்திரை மற்றும் வெப் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக, ஆஹா கல்யாணம் வெப் தொடரில் அவர் நடித்த பவி டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் பிரிகிதாவுக்கு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.
வெப் தொடரில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. வர்மா, வேலன், இரவின் நிழல், கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் பிரிகிதாவின் நடிப்பு கவனம் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதுடன், சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ள பிரிகிதா, தொடர்ந்து தனது நடிப்பு பயணத்தை முன்னெடுத்து வந்தார். இளம் வயதிலேயே வெப் தொடர், திரைப்படம் என வெவ்வேறு தளங்களில் பணியாற்றிய அவர், ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் ராம் என்பவரை காதலித்து வருவதாக பிரிகிதா சாகா சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்திருந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது தங்களது காதலை திருமண உறவாக மாற்றியுள்ளனர்.
பிரிகிதா சாகா – ஆனந்த் ராம் திருமணம் தற்போது இனிதே நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்வின் புகைப்படங்களை பிரிகிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண கோலத்தில் இருக்கும் பிரிகிதாவின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள், புதிய வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

