இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்
Google நிறுவனம், கூகுள் மீட்டில் பேசும் நபர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஒரு மொழியில் பேசும் நபரின் ஆடியோவை, மற்றொரு நபரின் விருப்பத்திற்கேற்ப, மொழிபெயர்த்து வழங்கும் வசதி இதுவாகும்.
இந்த வசதி, கூகுள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் மீட்டில் பேசப்படும் வார்த்தைகள் நேரடியாக, கேட்பவரின் விருப்ப மொழியில் மொழிபெயர்க்கப்படும். இதில், பேசுபவரின் குரல், தொனி, உணர்வு ஆகியவை இயல்பாகவே மொழிபெயர்ப்பில் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், "இந்தி தெரியாது" என்று கூற வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை. ஹிந்தியில் பேசும் பேரன், பேத்திகள் என்ன பேசுகிறார்கள் என்பதை, தமிழ் மட்டுமே தெரிந்த தாத்தா, பாட்டிகள் அவர்களுடன் உரையாட முடியும். இனி, தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதும். உலகில் உள்ள அனைத்து மொழிகள் பேசும் நபர்களுடன் உரையாட இந்த வசதி உதவும்.
அலுவலகங்களிலும் இனி மொழி பிரச்சனை இருக்காது. ஒரு ஊழியர் எந்த மொழியில் பேசினாலும், இன்னொரு ஊழியர் அதை தனது விருப்ப மொழிக்கு மாற்றி, அவர் சொல்வதை புரிந்து கொள்ள முடியும்.
ஆரம்ப கட்டத்தில், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்தாலியன், ஜெர்மன், போர்த்துக்கீஸ் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்படும் எனவும், இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ் உள்பட இந்திய மொழிகளும் இதில் இணைக்கப்படும் எனவும், கூகுள் தெரிவித்துள்ளது.
Edited by Siva