தமிழ் சினிமாவில் குரங்கு பொம்மை படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் நித்திலன். அதன் பின்னர் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா படத்தை இயக்கினார். இந்த படம் உலகளவில் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. அதே போல ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நித்திலன் ரஜினிகாந்தை சந்தித்து அவருக்காகக் கதை ஒன்றை சொன்னதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி மேலதிக தகவல் இல்லை. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து சுந்தர் சி விலகியுள்ள நிலையில், மீண்டும் ரஜினி தரப்பின் பார்வை நித்திலன் பக்கம் திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் மீண்டும் ரஜினியை சமீபத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஜினி படத்தை நித்திலன் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.