மாஸ்க் படத்தில் கவின் பாத்திரத்தில் வெற்றிமாறன் சார் கைவைத்து மாற்றினார் – நெல்சன் பகிர்ந்த தகவல்!
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மாஸ்க் படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் அப்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நெல்சன் “முதலில் இந்த திரைக்கதையைப் படித்தபோது கவின் கதாபாத்திரத்தை, யாரோ அவரை வெறுக்கும் ஒருவர் எழுதியது போல இருந்தது. பின்னர் வெற்றிமாறன் சார்தான் கைவைத்து கவின் கதாபாத்திரத்தை மாற்றியுள்ளார்.” எனப் பேசியுள்ளார். படத்தில் கவின் நெகட்டிவ் ஷேட் ஒன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஆண்ட்ரியா சம்மந்தப்பட்ட சிலக் காட்சிகளை இயக்குனர் வெற்றிமாறனே இயக்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே இயக்குனருக்கும் கவினுக்கும் இடையே மோதல், கவினுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே மோதல் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. இதை உறுதிபடுத்துவது போல படத்தின் போஸ்டர்களிலும் வாத்தியாராக வெற்றிமாறன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மாஸ்க் படம் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.