கும்கி 2 படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை…!
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் தன்னுடைய ஹிட் படமான கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் யானைகளைப் பற்றிய படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தபடத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லன் வேடத்தில் நடிக்க,மதி மற்றும் ஸ்ரிதா ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தான், கும்கி 2 படத்தை எடுப்பதற்காக 2018 ஆம் ஆண்டு 1.5 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கடனை அடைக்காமல் கும்கி 2 படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் நடப்பதாக கூறி அவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.