விஜய் தேவரகொண்டா நடித்து தயாராகியுள்ள கிங்டம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் தேவரகொண்டா, அனிருத் பற்றி பேசியது வைரலாகியுள்ளது.
தெலுங்கில் நானியை வைத்து ஜெர்சி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் தின்னனுரி. ஜெர்சி, மல்லி ராவாவை தொடர்ந்து தற்போது இவர் இயக்கியுள்ள படம் கிங்டம். இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபமாக விஜய் தேவரகொண்டாவிற்கு ஹிட் படங்கள் கிடைக்காத நிலையில் இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார். சமீபத்தில் படத்தின் ப்ரொமோஷனுக்காக பேட்டியளித்த விஜய் தேவரகொண்டா, அனிருத்தின் இசை மீதான விருப்பம் குறித்து பேசினார்.
அப்போது அவர் “அனிருத்தின் இசையை அவரது 3, விஐபி உள்ளிட்ட படங்கள் வெளியான காலத்திலிருந்தே பிடிக்கும். அப்போது நான் நடிக்கத் தொடங்கவில்லை. ஆனால் நான் படம் நடிக்கும்போது, அனிருத்தின் துள்ளலான இசையில் நான் இடம்பெறும் காட்சி ஒன்று வர வேண்டும் என விரும்பினேன். அது இந்த படத்தில் நடந்துள்ளது.
நான் மட்டும் ஒரு அரசனாக இருந்திருந்தால் அனிருத்தை கடத்திச் சென்று என் அரண்மனையில் வைத்து எனது அனைத்து படத்திற்கும் அவரையே இசையமைக்க சொல்லுவேன்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K