எப்போதோ நடந்திருக்கவேண்டும்… இப்போதுதான் நடக்கிறது… ரஜினியுடன் இணையும் படம் பற்றி மனம்திறந்த கமல்!
தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் கடைசியாக இணைந்து நடித்து 46 வருடங்களுக்கு மேலாகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்த படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன் இந்த படம் பற்றி சூசகமாக பதிலளித்துள்ளார். “நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தது விரும்பி பிரிந்ததுதான். ஒரு பிஸ்கெட்டை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொடுத்தார்கள். ஆளுக்கொரு பிஸ்கெட் வேண்டும் என்று நாங்கள் பேசி பிரிந்தோம். ஆனால் இப்போது பாதி பிஸ்கட்டே போதும் என நினைக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது பற்றி அடிக்கடி பேசிவந்தோம். இது எப்போதோ நடந்திருக்க வேண்டும். இப்போதுதான் நடக்கிறது.” எனப் பேசியுள்ளார்.