வியாழன், 4 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2025 (12:34 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரையுலகப் பயணம்: துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரையுலகப் பயணம்:  துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்த அரிய சாதனையை கொண்டாடும் வகையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  ரஜினியின் 'கூலி' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியைப் பார்த்ததாகவும், அது ஒரு "பவர்-பேக்டு மாஸ் என்டர்டெய்னர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய அவர், 50 ஆண்டுகளை கடந்து இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த சிறப்பான தருணத்தை, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.
 
ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான 'கூலி', நாளை வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 
 
இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த திரைப்படத்தை முன் கூட்டியே பார்த்ததாகவும், அது அனைத்து தரப்பு ரசிகர்களின் இதயங்களையும் கவரும் என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
"இந்த பவர்-பேக்டு மாஸ் என்டர்டெய்னரை நான் முழுமையாக ரசித்தேன்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது, 'கூலி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், சத்யராஜ், லோகேஷ் கனகராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, அனிருத், சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva