தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவர் சமீபத்தில் ’ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கி வெளியிட்டார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி, சரத்குமார், பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி லிவ் நிறுவனம் தயாரித்த இந்த வெப் தொடர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அதில் இருந்து விஜய் சேதுபதி விலகினார். இந்நிலையில் அது குறித்த வருத்தத்தை சேரன் பகிர்ந்துள்ளார். அதில் “விஜய் சேதுபதி என் படத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டு பின்னர் விலகியது வருத்தமாக இருந்தது. மனநிலை பாதிக்கப்படும் அளவுக்கு சென்றேன். அந்த படத்தில் இருந்து விலகியது அவருக்குப் பாதிப்பில்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய பாதிப்பு. நாம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி, அதற்காக மெனக்கெட்டு உக்காந்து திரைக்கதை எழுதினால், அதைப் பற்றி வருத்தம் இல்லாமல் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். சினிமாவில் நிறையப் பேர் இப்படிதான் இருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.