பொது இடத்தில் விசிலடித்த ரசிகர்கள்… சைகையிலேயே ‘ஆஃப்’ செய்த அஜித்!
இந்த ஆண்டு முழுவதும் சினிமா மற்றும் கார் பந்தயம் என இரட்டைக் குதிரைகளில் பயணித்து வருகிறார் அஜித். தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி அடுத்து ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அடுத்து மலேசியாவில் நடக்கவுள்ள லீ மான்ஸ் பந்தயத்திலும் அவரது அணிக் கலந்துகொள்ளவுள்ளது.
கார் பந்தயங்கள் காரணமாக ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நாட்டில் இருக்கிறார் அஜித். இந்நிலையில் அஜித் சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித் ஹோட்டல் ஒன்றில் இருக்க அவரைப் பார்க்கும் ரசிகர்கள் சிலர் அவரைப் பார்த்த ஆச்சர்யத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர்களுக்குக் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அஜித். அப்போது ஒரு ரசிகர் ஆர்வமிகுதியில் பொது இடம் என்று கூட பார்க்காமல் விசிலடிக்க, அதனால் முகம் மாறும் அஜித் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என சைகை செய்ய அந்த ரசிகர் அமைதியாகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆகிவருகிறது. தன்னுடைய ரசிகர்கள் ஒரு நடிகர் இப்படிதான் பொறுப்புடன் கட்டுப்படுத்தவேண்டும் என அஜித்துக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.