வியாழன், 12 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி மாதத்தில் வரும் பண்டிகைகளும் அதன் சிறப்புகளும் !!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.


ஆடி மாதம்  சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை  சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 
 
ஒரு சமயம் பார்வதி சிவனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். உங்களின் தேகத்தில் பாதியை மகா விஷ்ணுவுக்கு அளிக்க வேண்டும் என கூறினார். இதனை  ஏற்றுக் கொண்ட சிவபெருமான் பொதிகை மலையில் தவம் இருந்தால் உனது வேண்டுகோள் நிறைவேறும் என்றார்.
 
பார்வதி தேவியும் ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ஆடி பௌர்ணமி அன்று பார்வதி தேவிக்கு  உத்திரம் நட்சத்திரத்தில் சங்கர நாராயணராக காட்சி தந்தார். இதனால் ஆடித்த பசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் இவ்விழா விமர்சையாக  கொண்டாடப்படுகிறது.
 
கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், “கருட பஞ்சமி” என்ற பெயரில் விரதமிருந்து  கொண்டாடப்படுகிறது. 
 
ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம், பூரம் நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் “ஆடிப்பூரம்” அன்று ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேரோட்டம்  நடத்தப்படுகிறது. 'ஆடிப்பூரம்" நாளில் ஆண்டாளை வணங்கிடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
 
கஜேந்திரன் என்ற யானையை ஒரு முறை முதலை ஒன்று கவ்வியது. வலியால் யானை, ஆதிமூலமே! என்று திருமாலை அழைத்தது. யானையின் அலறலைக்  கேட்ட திருமால் தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று கஜேந்திர யானையை காப்பாற்றியது ஆடிமாதத்தில் தான்.
 
விவசாயத்தை காத்து வரும் காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
 
ஆடி மாத பௌர்ணமி நாளில் ஹயக்கீரிவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. ஏனெனில் ஹயக்கீரிவர் அவதாரம் நிகழ்ந்தது ஆடி மாதத்தில்  தான்.
 
ஆடி மாதத்தில் வியாச பூஜை நடத்தப்படுகின்றது. குருக்களுக்கெல்லாம் குருவாக போற்றப்படுபவர் வியாசர். எனவே ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பௌர்ணமி  அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும்.