விஜய் விவகாரம்: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன அறிவுறுத்தினார்?
சமீபத்தில் நடந்த புத்தக விழாவில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அதற்கு பதிலடியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்பட சில அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் விவகாரம் குறித்து அமைச்சர்கள் பதில் தருவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற நூல் வெளியீட்டு விழாவில், விஜய் பேசும்போது, 200 வெல்வோம்" என எகத்தாளம் விளக்கமிடுபவர்களுக்கு மக்களுடன் சேர்ந்து எச்சரிக்கை எடுப்பதாகவும், உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் மைனஸ் ஆகிவிடும்" என்றும், "மழை நீரில் போட்டோ எடுப்பதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை" என்றும் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பதிலடி தந்து கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பதில் தருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
புதிதாக கட்சி தொடங்கும் நபர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும், அவர்கள் களத்தில் தங்களை நிரூபிக்கட்டும் என்றும், அதுவரை எந்த விஷயத்தையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், அவர்களுக்கு பதிலடி கொடுக்க ஐடி வின் இருக்கிறது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Edited by Siva