திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:21 IST)

பிரதமரை அடுத்து சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய ஆலோசனையா?

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சோனியா காந்தியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தேவையான மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மறைந்த சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்ற முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பில் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.
 
இந்நிலையில், இன்று மாலை முதல்வர் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவில் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran