’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில அரசியல் வசனங்களை சென்சார் அதிகாரிகள் நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு கூறி இருப்பதாவது:
சமூக அக்கறையுள்ள இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்களின் விடுதலை இரண்டாம் பாகம் வரும் திசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. குறிப்பாக, அரசுஅரசாங்கம்', 'தேசிய இன விடுதலை' ஆகிய இடங்களில் ஒலியை நிறுத்தவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.
'பிரச்சனையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களங்களிலிருந்து உருவாக்கிக்கனும்' என்று படத்தில் உள்ள வசனத்தை 'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்' என்று திருத்தும்படி சொல்லியுள்ளது சென்சார். ஆபாசம்,பிற்போக்குத்தனம், சனாதனப்பரப்புரை என திரையை அழுக்காக்கி, சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் சூழலில், சமூகத்தையும் இளைஞர்களையும் சமூகநீதி பாதைக்கு அழைத்துச்செல்லும் சமூக பொறுப்போடு களமாடி வருபவர் திரு.வெற்றிமாறன் அவர்கள்.
விடுதலை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில்,தணிக்கை குழுவினரின் இந்த போக்கு படைப்பிலக்கியவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும். தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும்.
Edited by Mahendran