1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 மே 2025 (09:25 IST)

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

சேலம் மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை மற்றும் விசாரணை அடிப்படையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில், கைதிகள் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் போன்ற தின்பண்டங்களை தயாரிக்கிறார்கள். இந்த பொருட்கள் சிறைக்குள் கைதிகளுக்கும், மேலும், சிறை அருகிலுள்ள ரோட்டில் அமைந்துள்ள சிறை கடையில் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த விற்பனை பணிகளை சிறை வார்டர் சுப்பிரமணியம் கவனித்து வந்தார். விற்பனைக்கு வந்த பணம் சிறை கணக்கில் சரியாக வராததை நிர்வாகம் கவனித்தது. இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.
 
விசாரணையில் பொருட்கள் வாங்கிய சிலர் பணத்தை GPay மூலம் அனுப்பியதாக கூறினர். அந்த GPay அக்கவுண்ட் எண் சுப்பிரமணியத்தின் மாமியாருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. கடந்த ஒரு வருடமாக, ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அந்த எண் மூலம் அனுப்பப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இதையடுத்து, சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த, அவர் பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சேலம் சிறை பொறுப்பாளர் வினோத் அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva