1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (12:12 IST)

5 எம்பிக்கள் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையில் இன்னொரு விமானம் இருந்ததா?

திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியாவின் ஏஐ2455 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றிருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கேரளாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டது. விமானி அவசரமாக சென்னை விமான நிலையத்தை கட்டுப்பாடு அறைக்குத் தொடர்புகொண்டு அனுமதி கேட்டு  தரையிறங்க முயன்றபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால், விமானி மீண்டும் விமானத்தை மேலே இயக்கி விபத்தைத் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.
 
ஆனால் இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது தரப்பில் விளக்கமளித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாகவே விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பிவிடப்பட்டதாகவும், ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் அல்ல, மாறாக கட்டுப்பாட்டு அறையின் அறிவுறுத்தலின்படிதான் விமானம் மீண்டும் வட்டமடித்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran