பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி இளைஞர் படுகொலை.. திருச்செந்தூரில் பயங்கரம்.. காதல் விவகாரமா?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே 30 வயது இளைஞர் மணிகண்டன், இன்று பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டன் ஒரு எலெக்ட்ரீசியன். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார். வழக்கம் போல இன்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் நோக்கி சென்றுள்ளார்.
தோப்பூர் விலக்கு அருகே, மூன்று மர்ம நபர்கள் மணிகண்டனை வழிமறித்துள்ளனர். தன்னிடம் அரிவாள் கொண்டு வந்திருந்த மர்ம நபர்களைக் கண்டதும், மணிகண்டன் அருகிலிருந்த ஒரு மரக்கடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால், அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நபர்கள், ஓட ஓட விரட்டி, கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது ஒரு காதல் விவகாரம் காரணமாக நடந்த கொலை என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட மணிகண்டன், ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Edited by Mahendran