திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:19 IST)

'ஒரே பாரதம் உன்னத பாரதம்'என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு கொளத்தூர் மணி கண்டனம்

kolathur mani
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் வரும் 1-11-23 அன்று இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற நிகழ்ச்சியில் நடத்த கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பெரியார்  பல்கலைக்கழகத்தில் 1-11-23 அன்று காலை 11 மணிக்கு ஆட்சிப் பேரவை கூடத்தில் கலாச்சார  பண்பாட்டு நடனம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக சுற்றறிக்கை வெளியானது.

இதற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  ‘’சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சங்கிகளின் பிடியில் இருக்கிற துணைவேந்தரின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதில் புதிதாக 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற ஒரு நிகழ்ச்சி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை தமிழக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு எதிரானது. தமிழக உயர் கல்வித் துறை வழிகாட்டலில் கீழ் தான் பல்கலை செயல்பட வேண்டும். ஆனால்‌ மத்திய அரசின் திட்டத்தினை  புகுத்துவது போல்  இந்த சுற்றறிக்கை உள்ளது. இந்தியா - பாரதம் என்ற சர்ச்சை ஓய்வதற்குள் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை  செயல்படுத்துவது தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிரானது ஆகும். தமிழக அரசின் கொள்கை கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய பல்கலைக் கழகம் இவ்வாறு சனாதனத்தைத் திணிப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த செயல்பாடுகளை தமிழ்நாடு அரசும் முதல்வரும்,   குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சகமும்  கண்காணித்து இதனைத் தடுப்பதற்கும், மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள  வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.