விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி..!
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை என குற்றம்சாட்ட முயற்சிப்பது, 41 பேர் பலியானதை ஒரு பிரச்சினையாக கருதாமல், அதனை கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்வதில்தான் விஜய் குறியாக இருக்கிறார் என்பதை கண்டு அதிர்ச்சியடைகிறேன். அதற்காக அவர் துளியும் வருத்தப்படுவதாகவோ, குற்ற உணர்வு கொள்வதாகவோ தெரியவில்லை. கொஞ்சம்கூட கவலைப்படாமல் ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது, அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியுள்ளார் என்பதைக் காட்டுகிறது” என்று அவர் விமர்சித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு இருக்கும் முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? செயல் திட்டங்களை வகுக்கும் அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா போன்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன்?
இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள், அலட்சியமானவர்கள், வேண்டுமென்றே தாமதமாக வந்தவர்கள் என்ற வரிசையில் விஜய்யும் வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்ன அச்சம்?”
“கொள்கை எதிரி என்று விஜய் கூறிய பிறகு, அவருக்கு பாஜக முட்டுக் கொடுப்பது ஏன்? கொள்கை எதிரி என்று பாஜக சொல்லி கொடுத்ததைத்தான் விஜய் திரும்பச் சொல்கிறார். பாஜக இதுபோன்ற சூது, சூழ்ச்சிகளை செய்ய விசிக இருக்கும்வரை தமிழகத்தில் முடியாது.”
விஜய் சுயமாக செயல்படவில்லை என்றும், நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர் பாஜகவால் அனுப்பப்பட்டவர்கள் என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டினார். விஜய்யின் அரசியல், கருத்தியல் சார்ந்தது அல்ல; திமுக வெறுப்பு மட்டுமே அவரது அரசியல் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
Edited by Mahendran