வியாழன், 21 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2025 (15:36 IST)

நாளை தவெக மாநாடு எதிரொலி: மதுரையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

TVK Vijay
மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டையொட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டிற்காக, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரப்பாத்தி கிராமத்தில் சுமார் 506 ஏக்கரில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மாநாட்டையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், எலியார்பத்தி, வலையங்குளம் மற்றும் காரியாபட்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அந்த பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
 
மேலும், மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 3,000 காவல்துறையினரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2,000 பவுன்சர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டுவிட்டார்.

Edited by Siva