தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதாரத்துறை இயக்குனர் அதிர்ச்சி தகவல்..!
தமிழகத்தில் அடுத்த 3 மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் டெங்கு பாதிப்பை கண்டறிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தஞ்சை கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெங்கு அறிகுறிகளுடன் மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவதை அடுத்து தஞ்சை கும்பகோணம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva