செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சில நாட்களுக்கு முன்பு கட்சியை விட்டு நீக்கினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என செங்கோட்டையன் பேசியதுதான் இதற்கு முக்கிய காரணம். தன்னை கட்சியை விட்டு நீக்கிய கோபத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன்.
மேற்கு மண்டலத்தில் அதிமுகவை செங்கோட்டையன் வலுப்படுத்தி வந்தார். கோபிசெட்டிபாளையத்தில் 8 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பலமுறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியை விஜய் கொடுத்திருக்கிறார்.
எனவே தனது ஆதரவாளர்களை தொடர்ந்து தவெகவில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பல பேர் தவெகவிற்கு வருவார்கள் என செய்தியாளர்களிடம் சொன்னார். இந்நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தை செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலேயே துவங்குகிறார். இன்று அங்கு பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
எனவே, மேற்கு மண்டல நிர்வாகிகளை அழைத்து கூட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும்.. பிரம்மாண்டமாக இருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் வரை அதில் கலந்து கொள்ள வேண்டுமென ஆர்டர் போட்டிருக்கிறாராம் பழனிச்சாமி. செங்கோட்டையன் இடத்திற்கு வந்துள்ள அதிமுக நிர்வாகிகளுக்கும் தங்களின் பலத்தை காட்ட வேண்டிய சூழ்நிலை என்பதால் அவர்களும் அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்.
வாழை, கரும்பு, பழங்களுடன் கூடிய பிரமாண்டமான நுழைவு வாயிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.