வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (10:40 IST)

தேனி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்!

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் நீர் தேங்கி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் ஏ.டி.எஸ். கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி உள்ளன.
 
இந்த நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
தனியார் மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியும் இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,பெண் நோயாளி ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதே போல கம்பம், போடி,ஆண்டிபட்டி சின்னமனூர்,உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தப் பரிசோதனை நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையம் தனியார் ரத்த பரிசோதனை நிலையங்களில் விசாரித்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
 
மேலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்திருப்பதை தொடர்ந்து இன்று பொது சுகாதாரத்துறை சார்பாக நடத்தப்பட்ட காணொளி காட்சி கலந்தாய்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசங்கர்,நிலைய மருத்துவ அதிகாரி சந்திரா,மருத்துவ கண்காணிப்பாளர் விஜயானந்த் ஆகியோர் பங்கேற்றனர்.சுமார் ஒரு மணி நேரம் இந்த காணொளி வழி காட்சி கலந்தாய்வு நடைபெற்றுள்ளது.
 
மேலும் தேனி மாவட்டத்தில் பரவி உள்ள டெங்கு காய்ச்சல் தொடர்பான விவரங்கள் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மூலமாக சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 
இது குறித்து ஒரு சில மூத்த மருத்துவர்களிடம் பேசியபோது,
 
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகம் இருப்பதாகவும் ரத்த தட்டனுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உள்ள டெங்கு நோயாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தட்டணுக்களின் எண்ணிக்கை 50,000 க்கும் கீழாக குறைந்த நோயாளிகள் மட்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாகவும் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
இது தவிர ஆண்டிபட்டி அருகே  சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி போதுமணி (22) வயது இளம் பெண் சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உயிரிழந்த போதும் மணிக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.
 
 
இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்காமல் இந்த மரணத்தை மறைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தேனி மாவட்டம் கேரள மாநிலத்தின் அருகே இருப்பதால் கேரளாவில் தற்போது வேகமாக பரவி வரும் நைல் காய்ச்சல் தேனி மாவட்டத்திலும் பரவி வருகிறதோ என்கிற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் வேகம் எடுத்திருப்பது டெங்கு காய்ச்சலா? அல்லது நைல் காய்ச்சலா? என்று பொதுமக்களிடம் விளக்கி அவர்களை எச்சரித்து அவர்களின் உயிரைக் காக்க வேண்டிய பொது சுகாதாரத் துறை, மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் இல்லை,நைல் பரவல் இல்லை என்று உண்மையை மறைத்து பொதுமக்களின் உயிரோடு விளையாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.