செவ்வாய், 22 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 21 ஜூலை 2025 (16:24 IST)

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Annamalai angry

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளியின் மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழுந்தது குறித்து வீடியோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை, ஏழை மாணவர்களின் உயிர் திமுகவிற்கு இளக்காரமாக போய்விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை “கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ₹64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

 

தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதில் கூட, திமுக அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா?

 

கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டியுள்ளன என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதி நாடகமாடியதோடு நிறுத்திக் கொண்டார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். 

 

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு கட்டிய கட்டிடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமே நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K