புயல் பாதிப்பு: இன்று தமிழகம் வருகிறது மத்திய ஆய்வுக்குழு..
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய இன்று மத்திய குழு சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி வங்கக்கடலில் தோன்றிய புயல் கரையை கடந்த போது, தமிழ்நாட்டின் பல இடங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் புயல் பாதிப்பின் உதாரணமாக, முதல் கட்டமாக ரூபாய் 2,000 கோடி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில், பாராளுமன்றத்திலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள், வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், இன்று சென்னைக்கு புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த குழுவில் ராஜேஷ் குப்தா, பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனலட்சுமி குமரன், ராகுல் பக்கேடி, பாலாஜி ஆகிய ஏழு பேர் இருப்பதாகவும், இவர்கள் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran