1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 மே 2025 (13:11 IST)

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம்: திருமாவளவன்

Thiruma
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு, பொதுமக்களுக்காக செய்யப்படும் "கண்துடைப்பு" நடவடிக்கையாகவே உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறைப்பட எப்போது நடக்கும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை. 2021ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு, கோவிட் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி 2031 தான். ஆனால் அதற்கு முன் 2029ல் மத்திய அரசு பதவிக்காலம் முடிவடைகிறது. 2031ல் பாஜக ஆட்சியில் இருப்பார்களா என்பது கேள்விக்குறி,” என்றார்.
 
பிகார் தேர்தலை கருத்தில் கொண்டு தான் இப்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும், அது தேர்தல் லாபத்தை நோக்கியதுதான் என்றும் அவர் விமர்சித்தார்.
 
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. "சிலர் இது மாநில அரசுகள் செய்ய வேண்டியது என சொல்கிறார்கள். ஆனால் அரசியலமைப்பின்படி இது மத்திய அரசின் பொறுப்பு என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவந்தோம். மத்திய அமைச்சர் வைஷ்ணவ் இதை உறுதி செய்துள்ளார்" என்றார்.
 
மே 31 அன்று விசிக சார்பில் மதச்சார்பின்மை பாதுகாக்க திருச்சியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran