9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையா? இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விபரம்..!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பின்னர், இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விவரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்பதோடு, அவர்கள் அழித்த ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால் குற்றம் நிரூபிக்கப்பட்டது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் சிபிஐயிடம் அச்சமின்றி சாட்சி அளித்துள்ளனர். ஒரு சாட்சியும் பிறழ்சாட்சியமாக இல்லாமல், தனித்தனியாக வாக்குமூலம் கொடுத்ததால் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார். அவர், ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று மதியம் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி அறிவிக்க உள்ளார்.
இந்த தீர்ப்பை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர். அனைத்து பெண்களுக்கும் இது ஒரு பாதுகாப்பாக அமைந்த தீர்ப்பு என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran